நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3.55 லட்சம் சிக்கியது.
நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.3.55 லட்சம் சிக்கியது.
நெல்லை தொழில் மையம்
நெல்லை பாளையங்கோட்டையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல்லை சேர்ந்த சிவசங்கரன் என்பவர் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொடங்க விண்ணப்பம் செய்பவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் பெற்று வழங்கப்படுகிறது.
அவ்வாறு தொழில் தொடங்க விண்ணப்பம் செய்பவர்களிடம் குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்ட பின்னரே வங்கி மூலம் கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதிரடி சோதனை
இதையடுத்து மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மெகலரின் எஸ்கால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராபின் ஞானசிங், சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகநயினார், மாரியப்பன், சீதாராமன் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4 மணியளவில் மாவட்ட தொழில் மையத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது பொது மேலாளர் சிவசங்கரன் அறையில் ஒரு பையில் இருந்து, கணக்கில் வராத சுமார் ரூ.3 லட்சத்து 55 ஆயிரம் சிக்கியது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தொழில் தொடங்க விண்ணப்பிப்பவர்களிடம் கடன் தொகையில் 10 சதவீதம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
ஆவணங்கள்
இந்த சோதனை இரவு வரை நீடித்தது. சோதனையின்போது, அலுவலகத்தில் இருந்த அனைவரின் செல்போன்களையும் போலீசார் பெற்றுக்கொண்டனர். அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
நெல்லை மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.3.55 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.