மாமல்லபுரத்தில் ஜப்பான் நாட்டு தூதர் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்


மாமல்லபுரத்தில் ஜப்பான் நாட்டு தூதர் புராதன சின்னங்களை ரசித்து பார்த்தார்
x

மாமல்லபுரம் வருகை தந்த இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு தூதர் சுசோகி ஹிரோசி அங்குள்ள பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றி பார்த்து ரசித்தார்.

செங்கல்பட்டு

இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு தூதர் சுசோகி ஹிரோசி மாமல்லபுரத்திற்கு நேற்று சுற்றுலா வந்தார். முன்னதாக கடற்கரை கோவிலுக்கு வந்த அவரை மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரி இஸ்மாயில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பார்த்த பிறகு அவருடன் டெல்லியில் இருந்து வந்த ஜப்பான் நாட்டு தூதரக அதிகாரி ஒருவர் அவருக்கு மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய அரிய தகவல்களை ஜப்பான் நாட்டு மொழியில் விளக்கி கூறினார்.

பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தார்.

கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம் சிற்பங்கள் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற அரிய தகவல்களை விரிவாக விளக்கி கூறினார். முடிவில் கடற்கரை கோவில் மற்றும் ஐந்துரதம், அா்ச்சுனன் தபசு உள்ளிட்ட அனைத்து புராதன சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். ஜப்பான் தூதரின் பெண் உதவியாளர் தங்கள் நாட்டு தூதரை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து தங்கள் நாட்டு சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து அவரை மகிழ்ச்சி படுத்தினார்.

மேலும் நேற்று காணும் பொங்கல் விஷேச தினம் என்பதால் தனக்காக இங்கு சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகளை பாதுகாப்புக்காக யாரும், தடுத்து நிறுத்த வேண்டாம் என்றும், அவர்கள் வழக்கம் போல் சுற்றி பார்க்கட்டும் என்றும், நானும் அவர்களுடனேயே சுற்றி பார்த்துவிட்டு செல்கிறேன் என்று தன்னுடன் வந்திருந்த அதிகாரிகளிடம் பெருந்தன்மையுடன் அவர் தெரிவித்தார்.

அதனால் ஜப்பான் நாட்டு தூதர் வரும் நேரத்தில் சுற்றுலா பயணிகள் யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை. அவர்கள் வழக்கம்போல் மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்த்துவிட்டு சென்றதை காண முடிந்தது. இந்தியாவுக்கான ஜப்பான் நாட்டு தூதர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story