கோடாங்கிபட்டியில்குப்பை கிடங்காக மாறிய கொட்டக்குடி ஆறு
கோடாங்கிபட்டியில் கொட்டக்குடி ஆறு குப்பை கிடங்காக மாறி வருகிறது.
போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு அணைக்கரைப்பட்டி, போடி, கோடாங்கிபட்டி, பூதிப்புரம், ஆதிப்பட்டி, பழனிசெட்டிபட்டி வழியாக தேனி பங்களாமேடு கூட்டாறு பகுதியில் முல்லைப்பெரியாற்றுடன் சங்கமிக்கிறது.
போடியில் இருந்து தேனி வரை இந்த ஆற்றில் கழிவுநீர் கலப்பதும், குப்பைகள் கொட்டப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக கோடாங்கிபட்டியில் கொட்டக்குடி ஆற்றின் கரையோரம் ஊரில் உள்ள குப்பைகள் குவிக்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக அவ்வாறு குவிக்கப்பட்ட குப்பைகள் ஆற்றின் கரையோரம் கடந்து ஆற்றுக்குள்ளும் கொட்டப்பட்டன. இதனால் தற்போது ஆற்றில் முளைத்த குன்று போன்று குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
கொட்டக்குடியில் இளநீர் போன்று தித்திப்பாக ஓடும் தண்ணீர் தேனியில் கூவம் போல் மாறி உள்ளது. இதற்கு ஆற்றை குப்பைக் கிடங்காக பயன்படுத்துவதும், கழிவுநீரை நேரடியாக ஆற்றில் கலப்பதும் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கோடாங்கிபட்டியில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தி, நாளுக்கு நாள் பாழாகிக் கொண்டிருக்கும் கொட்டக்குடி ஆற்றை பாதுகாக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.