கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ரூ.1½ கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ரூ.1½ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வழங்கினர்
தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க் கள், கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கருணாநிதி உருவப்படத்துக்கு கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 360 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர். விழாவில் தேனி ஓன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, தேனி அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுப்பிரியா மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடந்தன. இந்த போட்டிகளை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.