காலிங்கராயன்பாளையத்தில்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்;மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு


காலிங்கராயன்பாளையத்தில்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்;மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x

காலிங்கராயன்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

ஈரோடு

காலிங்கராயன்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

மேட்டுநாசுவம்பாளையம் காலிங்கராயன்பாளையத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். காலிங்கராயன்பாளையத்தை சுற்றி, எலவமலை, அணைநாசுவம்பாளையம் போன்ற கிராமங்களில் 15 ஆயிரம் பேர் உள்ளனர். இந்த பகுதியில், 5 தொடக்க பள்ளிக்கூடங்கள், ஒரு நடுநிலை பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகின்றன. இங்கு 6 ஆயிரம் மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆனால் இந்த பகுதியில் போதிய மருத்துவ வசதிகள் இல்லை.

இங்கு ஏற்கனவே செயல்பட்ட அம்மா மினி கிளினிக்கும் அகற்றப்பட்டுவிட்டது. எனவே இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதிதாக அமைத்து, போதிய டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தேவையான இடவசதி உள்ளது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

320 மனுக்கள்

இதேபோல் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா, வேலைவாய்ப்பு, கல்விக்கடன், தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 320 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி ரங்கநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி மீனாட்சி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story