இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர்

சாத்தூர்,

இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி திருவிழா

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் நடைபெறும் ஆடி கடைசி வெள்ளி திருவிழா சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி மகா உற்சவர் விழா நேற்று நடைபெற்றது.

இதையொட்டி மதியம் 2 மணிக்குமேல் உற்சவர் அம்மன் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுக்குப்பின், ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது.

லட்சக்கணக்கான பக்தர்கள்

என்.மேட்டுப்பட்டி, இருக்கன்குடி, கே.மேட்டுப்பட்டி கிராம மக்கள் மேள தாளத்துடன் வரவேற்று அம்மனை தரிசித்தனர். அப்பனேரி கிராமமக்கள் நகரா ஒலி எழுப்பி வழிபாடு செய்தனர். இந்த ஆண்டு நத்தத்துப்பட்டி மக்கள் அம்மனை ரிஷப வாகனத்தில் பவனி வர செய்தனர். இந்த திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏராளமானோர் கோவில் முன்பு பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் வசதிக்காக விருதுநகர், நெல்லை, கோவில்பட்டி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், தென்காசி, மதுரை, சிவகாசி, அருப்புக்கோட்டை, ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் திருவிழாவை முன்னிட்டு கோவில் பகுதிகளில் மருத்துவ வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செய்திருந்தன. இருக்கன்குடி, என்.மேட்டுப்பட்டி ஊராட்சி மன்றங்கள் சார்பாக ஆங்காங்கே குடிநீர் மற்றும் மோர் பந்தல்கள் அமைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

பாதுகாப்பு பணி

விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில், சாத்தூர் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் 1,300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story