ஈரோட்டில் மகளிர் தினம் கொண்டாட்டம்சீருடை அணிந்து அலுவலகம் வந்த பெண் ஊழியர்கள்
பெண் ஊழியர்கள்
ஈரோட்டில் மகளிர் தினத்தையொட்டி பெண்கள் அலுவலகத்துக்கு ஒரே மாதிரி சீருடை அணிந்து வந்தார்கள்.
உலக மகளிர் தினம்
உலக மகளிர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோட்டிலும் மகளிர் தின விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்கள் என்று பல்வேறு துறைகளிலும் பணியாற்றும் பெண்கள் நேற்று உற்சாகத்துடன் மகளிர் தினத்தை கொண்டாடினார்கள். ஈரோடு மின்சார வாரிய அலுவலகத்தில் மண்டல தலைமை பொறியாளர் கே.இந்திராணி தலைமையில் அனைத்து பெண் அதிகாரிகள், ஊழியர்கள் ஒரே வண்ணத்தில் சேலை கட்டி வந்து மகிழ்ச்சியாக மகளிர் தினத்தை கொண்டாடினார்கள்.
வாழ்த்து தெரிவித்தனர்
இதுபோல் பல்வேறு அலுவலகங்களிலும் உயர் பெண்அதிகாரிகள் முதல் கடைமட்ட ஊழியர் வரை சீருடையாக ஒரே நிறத்தில் சேலை கட்டி வந்து மகிழ்ந்தனர். உயர் அதிகாரிகள் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் இனிப்பு கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். இதுபோல் வங்கிகளிலும் பெண்அதிகாரிகள், ஊழியர்கள் மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினார்கள். சிறப்பு நிகழ்ச்சிகள், பரிசு மற்றும் விருது வழங்கும் விழாக்களும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே நடத்தப்பட்டன.
இதுபோல் ஆண்கள் நேற்று காலையில் இருந்தே மகளிர் தினவாழ்த்துகளை தங்கள் வீட்டு பெண்கள், உறவினர்கள், தோழிகள் என்று அனைவருக்கும் தெரிவித்தனர். வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், முகநூல் பக்கங்களில் மகளிர் தின வாழ்த்துகள் குவிந்தன.
அதே நேரம் அன்றாடம் கூலி வேலை செய்யும் பெண்கள் எந்த கொண்டாட்டமும் இன்றி தங்கள் வேலையைப்பார்த்தனர்.