ஈரோட்டில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது; 7 பவுன் நகை மீட்பு


ஈரோட்டில்  நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது;  7 பவுன் நகை மீட்பு
x

ஈரோட்டில் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா். இவா்களிடம் இருந்து 7 பவுன் நகை மீட்கப்பட்டது.

ஈரோடு

ஈரோடு மாநகரில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பெண்களிடம் வழிப்பறி, நகை பறிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ஈரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர்கள், நாமக்கல் மாவட்டம் கவுண்டன்பட்டி குட்டைதெருவை சேர்ந்த ஜெயக்குமாரின் மகன் மணிகண்டன் (வயது 27), நடராஜபுரம் 4-வது வீதியை சேர்ந்த பொன்னுசாமியின் மகன் தவச்செல்வன் (21) ஆகியோர் என்பதும், அவர்கள் 2 பேரும் கடந்த மாதம் ஈரோட்டில் 2 பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்து 7 பவுன் நகையை மீட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story