ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி; கிலோ ரூ.10-க்கு விற்பனை
ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆனது.
ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து நேற்று கிலோ ரூ.10-க்கு விற்பனை ஆனது.
காய்கறி மார்க்கெட்
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு 800-க்கு மேற்பட்ட காய்கறி கடைகளும், 200-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் செயல்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தினந்தோறும் 15 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனைக்காக வந்தது. வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று விலை உயர்ந்து விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று ஈரோடு மார்க்கெட்டுக்கு 25 டன் காய்கறிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.
தக்காளி விலை வீழ்ச்சி
காய்கறிகள் வரத்து அதிகரித்ததன் காரணமாக நேற்று அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையான தக்காளி நேற்று விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் 2 கிலோ 3 கிலோ என தக்காளியை வாங்கிச்சென்றனர். ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கேரட் -ரூ.60, பீட்ரூட் -ரூ.60, கத்தரிக்காய் -ரூ.60, புடலங்காய் -ரூ.30, பீர்க்கங்காய் -ரூ.40, சுரைக்காய் -ரூ.15, மிளகாய் -ரூ.50, பீன்ஸ் -ரூ.30, வெண்டைக்காய் -ரூ.30, உருளை கிழங்கு -ரூ.50, காலிபிளவர் -ரூ.40, சின்னவெங்காயம் -ரூ.80, பெரிய வெங்காயம் -ரூ.40, முருங்கைக்காய் ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை ஆனது.