சக்கரக்கோட்டை சரணாலயத்தில் தண்ணீர் குறைந்தது


சக்கரக்கோட்டை சரணாலயத்தில் தண்ணீர் குறைந்தது
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் குறைந்தது. இதனால் கூடுகட்டி தங்கி உள்ள பறவைகள் இரைதேடி தவித்து வருகின்றன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் குறைந்தது. இதனால் கூடுகட்டி தங்கி உள்ள பறவைகள் இரைதேடி தவித்து வருகின்றன.

பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரையை தேடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகின்றன. அவை கூடுகட்டி தங்களின் உணவுத்தேவையை பூர்த்தி செய்து சீசன் முடிந்ததும் ஏப்ரல் மாத இறுதியில் திரும்பி செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டன. ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மட்டும் வைகை தண்ணீர் வரத்தால் ஓரளவு நீர் இருந்ததால் அதில் உள்ள மரங்களில் கூடுகள் கட்டி தங்கியிருந்த பறவைகள் ஏமாற்றத்துடன் தங்கள் வாழ்விடத்தை நோக்கி சென்றுவிட்டன.

சக்கரக்கோட்டை கண்மாய்

இதன் காரணமாக மாவட்டத்தின் தேர்த்தங்கல் சரணாலயம் உள்ளிட்டவைகளில் பறவைகள் இன்றி கடும் நிசப்தமாகவே காட்சி அளித்தது. இந்நிலையில் ராமநாதபுரம் அருகே உள்ள சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலய பகுதியில் கடந்த ஆண்டு வைகை தண்ணீர் அதிகளவில் வரவழைக்கப்பட்டு தண்ணீர் நிறைக்கப்பட்டது. இந்த வைகை தண்ணீர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை குறையாமல் கடல் போல் காட்சி அளித்தது.

இந்த ரம்மியமான சூழ்நிலை காரணமாக கண்மாய் பகுதியில் உள்ள மரங்களில் ஏராளமான பறவைகள் தங்களின் உணவுத்தேவைக்காக கூடு கட்டி வசித்து வந்தன. மற்ற சரணாலயங்களில் பறவைகள் இன்றி சீசன் முடிவுக்கு வந்தநிலையில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாயில் மட்டும் வைகை தண்ணீர் இருந்து வந்ததால் அதிகளவில் பறவைகள் கூடுகட்டி தண்ணீரில் உள்ள மீன்கள், புழுக்கள் உள்ளிட்ட உணவுகளை உண்டு பறந்து திரிந்துவந்தன.

தண்ணீர் குறைந்தது

இந்நிலையில் தற்போது சக்கரக்கோட்டை கண்மாயில் திடீரென்று தண்ணீர் முழுமையாக வற்றி விட்டது. கடல்போல் காட்சி அளித்த தண்ணீர் எவ்வாறு குறைந்தது என்பது புரியவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது கடும் கோடைவெயில் காரணமாக தண்ணீர் வற்றிவிட்டதாக தெரிவிக்கின்றனர். இந்த வறண்ட நிலை காரணமாக தண்ணீரை நம்பி சரணாலய கண்மாயில் கூடுகட்டி வாழ்ந்து வந்த பறவைகள் தற்போது இரைஇன்றி தவித்து அங்கும் இங்கும் சுற்றி பறந்தவண்ணம் உள்ளன.


Related Tags :
Next Story