வீரவநல்லூரில் இந்து வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
வீரவநல்லூரில் இந்து வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது
சேரன்மாதேவி:
வீரவநல்லூரில் தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். வீரவநல்லூர் இந்து வியாபாரிகள் சங்க தலைவர் விக்கிரமாதித்தன் வரவேற்று பேசினார். செயலாளர் ரமேஷ் அறிக்கை வாசித்தார்.
இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., சங்க மாநில செயலாளர் காசிவேல், வீரவநல்லூர் கார், வேன் ஓட்டுனர் நலச்சங்க தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். பொருளாளர் மாரியப்பன் நன்றி கூறினார்.
சேரன்மாதேவி அருகே பூதத்தான் குடியிருப்பு பள்ளி மாணவியின் கல்விக்காக இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். சேரன்மாதேவி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கையில், ''அம்பை சட்டமன்ற தொகுதி விவசாயம் சார்ந்த பகுதி ஆகும். இதில் கன்னடியன் கால்வாயை நம்பி சுமார் 12 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இங்கு விவசாயம் செய்ய ஜூன் 1-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும். கால்வாய் பகுதியில் உள்ள அமலைச்செடிகளை அகற்றி, தண்ணீர் வேகமாக கடைமடை வரை செல்லவும், தண்ணீர் வீணாகாத வகையில் சிமெண்டு லைனிங் அமைக்குமாறும் சட்டசபையில் வலியுறுத்தி பேசினேன். அதனை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் இருப்பதால், போர்க்கால அடிப்படையில் வருகிற 1-ந்தேதிக்கு முன்பாகவே தண்ணீர் திறக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர், தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் ஆகியோரிடம் வலியுறுத்தினேன்'' என்று தெரிவித்துள்ளார்.