மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்


மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை கலெக்டர் பழனி வழங்கினார்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் அரசு மருத்துவமனை வீதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாவட்ட கலெக்டர் சி.பழனி தொடங்கி வைத்து பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 2022-2023-ம் கல்வியாண்டில் 18 வயதுக்குட்பட்ட 4,682 மாற்றுத்திறனுள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்காக விழுப்புரம் நகராட்சி மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களில் மார்ச் மாதம் 2-ந் தேதி வரை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறலாம்

இம்முகாமில் மாற்றுத்திறனாளி மாணவர்களை பரிசோதனை செய்து மருத்துவ சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் புதிய தேசிய அடையாள அட்டை வழங்குதல், புதுப்பித்தல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் தேர்வு செய்தல், அறுவை சிகிச்சை தேவைப்படும் மாணவர்களை கண்டறிதல், பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை பெற்றுத்தருதல், இலவச பஸ், ரெயில் பயண அட்டை வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார். இதனை தொடர்ந்து தலா ரூ.9,475 வீதம் 6 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.56,850 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலியும், தலா ரூ.1,950 வீதம் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.3,900 மதிப்பில் நடை பழகு உபகரணங்களையும் கலெக்டர் சி.பழனி வழங்கினார்.

இம்முகாமில் விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, உதவி திட்ட அலுவலர் தனவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல், நகரமன்ற கவுன்சிலர்கள் பத்மநாபன், சங்கர், கோமதி பாஸ்கர், உஷாராணி மோகன், நவநீதம் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story