437 மாற்றுத்திறனாளிகளுக்குரூ.49 லட்சத்தில் உதவி உபகரணங்கள்
தஞ்சையில் 437 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.49 லட்சத்தில் உபகரணங்களை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் 437 பேருக்கு ரூ.49 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பராமரிப்பு உதவித்தொகை
தஞ்சை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31 ஆயிரத்து 169 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் 28 ஆயிரத்து 930 பேருக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பராமரிப்பு உதவித்தொகை 8 ஆயிரத்து 675 பேருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 12 மாதத்திற்கு ரூ.20 கோடியே 81 லட்சம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 844 பயனாளிகளுக்கு ரூ.69 லட்சத்து 88 ஆயிரத்து 320 மதிப்பில் உபகரணங்கள் பெறப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக 437 பேருக்கு ரூ.49 லட்சத்து 24 ஆயிரத்து 874 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆதிதிராவிடர் மாற்றுத்திறனாளி 5 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காட்சி
பின்னர் அமைச்சர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியையும் பார்வையிட்டார். சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கி வைத்தார். முன்னதாக பாரத ஸ்டேட் வங்கி சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து குறைதீர்க்கும் அரங்கம் வரை செல்வதற்கு பேட்டரியால் இயங்கும் வாகனத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
விழாவில் மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், ஆதிதிராவிடர் நல அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.