உதவி கலெக்டர் ஆய்வு
குச்சிபாளையம் பகுதியில் உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.
அணைக்கட்டு
அணைக்கட்டு தாலுகாவுக்குட்பட்ட கீழ்கிருஷ்ணாபுரம், திப்ப சமுத்திரம் ஆகிய 2 ஊராட்சிகளில் அடுத்த மாதம் 8-ந் தேதி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடக்கிறது.
முகாமில் நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகளை தேர்வு செய்வதற்காக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
திப்பசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தட்டாங்குட்டை பகுதியில் 70 ஆண்டுகளாக 26 குடும்பத்தினர் தோராயப்பட்டாவை வைத்து வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
அவர்கள் தங்களுக்கு வீட்டு மனைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் குச்சிபாளையத்தில் 60 ஆண்டுகளாக தோராயபட்டாவில் 150 பேர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். அவர்களும் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில் சிறப்பு மனுநீதி நாள் முகாமில் அவர்களுக்கு பட்டா வழங்குவதற்காக வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் ரேவதி, கிராம நிர்வாக அலுவலர் நந்திவர்மன் ஆகியோர் அந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அப்பகுதி மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று உதவி கலெக்டரிடம் கூறினர்.
மேலும் ஏப்ரல் மாதம் குச்சிப்பாளையத்தில் நடைபெற இருக்கும் எருது விடும் திருவிழாவிற்கான இடத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சி.பாஸ்கரன் மற்றும் திப்பசமுத்திரம், கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.