சட்டசபை நிகழ்வுகள் நேரலை: காலதாமதம் செய்யாமல் இறுதி முடிவு எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


சட்டசபை நிகழ்வுகள் நேரலை: காலதாமதம் செய்யாமல் இறுதி முடிவு எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x

கோப்புப்படம்

சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், லோக் சத்தா கட்சியின் மாநில தலைவர் ஜெகதீஷ்வரன், தே.மு.தி.க. தலைவரான மறைந்த விஜயகாந்த், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் கார்த்திக் சேஷாத்திரி, எலிசெபத் சேஷாத்திரி, வி.டி.பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகினர். அப்போது அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது தொடர்பாக பல மாநிலங்களிடம் இருந்து தகவல்கள் கோரப்பட்டன. சில மாநிலங்கள் பதிலளித்துள்ளன. சில மாநிலங்கள் பதிலளிக்கவில்லை. நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து சபாநாயகர் ஆய்வு செய்து வருகிறார். முழுமையாக தகவல்கள் கிடைத்தபின் முடிவெடுக்கப்படும்'' என கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ''இந்த விவகாரத்தில் காலதாமதம் செய்யாமல், ஏதேனும் ஒரு இறுதி முடிவு எடுக்க வேண்டும்' என்று தெரிவித்து, விசாரணையை வருகிற ஜூன் 25-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story