பால் உற்பத்தியாளர் சங்க பேரவை கூட்டம் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் பங்கேற்பு
பால் உற்பத்தியாளர் சங்க பேரவை கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சிவல்பட்டி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டுறவு சங்க பொதுப்பேரவைக்கூட்டம் இளையாத்தன்குடி தனியார் மகாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் வெள்ளையன், காரைக்குடி நாதன், ஒன்றிய துணை செயலாளர் நெடுமரம் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு நிகர லாபத்தில் உறுப்பினர்களுக்கு பங்குதொகைகள் பிரித்து வழங்குதலும் மற்றும் கடந்த ஆண்டிற்கான கூடுதல் கொள்முதல் விலையாக இச்சங்கத்தின் 45 உறுப்பினர்களுக்கு ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான லாப பங்கீட்டுத் தொகையினை காசோலையாக வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, முத்துக்குமார் கூட்டமைப்பு தலைவர் மாணிக்கவாசகம், ஊராட்சிமன்ற தலைவர் கவிதா முருகப்பன் நெற்குப்பைபாண்டி, கீழசெவல்பட்டி ஜோதி கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் செயலர் முத்துராமன் நன்றி கூறினார்.