சட்டசபை புகழ்பாடும் மன்றமாக உள்ளது... மக்களின் பிரச்சனைகள் பேசப்படுவதில்லை - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
சட்டசபை புகழ்பாடும் மன்றமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
சட்டசபை புகழ்பாடும் மன்றமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை, ராயபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்-மோர் பந்தலை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கிரிக்கெட் டிக்கெட் பெற திமுக பிரமுகர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சட்டசபையில் பிரதான பிரச்சனைகள் எடுக்கப்படுவதில்லை. அப்படியே எடுத்தாலும் கூட, ஒன்று அல்லது இரண்டு நிமிடம் பேசிவிட்டு ஆளுங்கட்சியினர் அவர்களின் புகழ் பாடுகின்றனர். சட்டசபை வெறும் புகழ்பாடும் மன்றமாக இருக்கிறதே தவிர, மக்கள் பிரச்சனைகளை பேசும் மன்றமாக இல்லை.
நான் சபாநாயகராக இருந்த காலத்தில் எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பாரபட்சம் பார்க்காமல் எல்லாருக்கும் வாய்ப்பு கொடுத்தேன். ஆனால் இப்போது கருத்து சுதந்திரம் இல்லை.
விளையாட்டிலும் அரசியல் கலந்து விட்டது. தற்போது கிரிக்கெட் டிக்கெட் பெற திமுக பிரமுகர்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.