அழகுநிலைய மேலாளரை தாக்கி பணம், செல்போன்கள், 2½ பவுன் நகை கொள்ளை
திருச்சியில் பட்டப்பகலில் பெண்கள் அழகு நிலையத்துக்குள் புகுந்து மேலாளரை தாக்கி பணம், செல்போன்கள், 2½ பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண்கள் அழகு நிலையத்தில் கொள்ளை
திருச்சி மேலப்புதூர் பகுதியில் நிலா சலூன் மற்றும் ஸ்பா என்ற பெயரில் பெண்கள் அழகுநிலையம் ஒன்று உள்ளது. இங்கு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நரி கல்பட்டி தெற்கு வீதியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 32) மேலாளராக பணியாற்றி வருகிறார். மேலும் ரம்யா, அனிதா உள்ளிட்ட சிலர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்து செல்வகுமாரின் இடது காதை கத்தியால் வெட்டி அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம், 8 செல்போன்கள் ஆகியவற்றை அந்த கும்பல் பறித்தனர். மேலும் அங்கு பணியாற்றும் ரம்யா என்ற ஊழியரிடம் 2 கிராம் தங்க கம்மலையும், அனிதா என்ற ஊழியரிடம் 2½ பவுன் தாலி சங்கிலியையும் அந்த கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது.
பட்டப்பகலில் துணிகரம்
இதில், அந்த கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த செல்வ குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்கள் அழகு நிலையத்தில் நகை-பணம், செல்போனை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் துணிகரமாக நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.