வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்; 8 பேர் மீது வழக்குப்பதிவு
காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனவடலிசத்திரம்:
காதலிப்பதாக கூறி மாணவிக்கு தொந்தரவு கொடுத்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை காதலிப்பதாக தொந்தரவு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா பனவடலிசத்திரம் அருகே கீழநீலிதநல்லூரைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவருடைய மகன் அஜய் பிரசாத் (வயது 20).
இவர் பனவடலிசத்திரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பிளஸ்-2 மாணவியை அடிக்கடி பின்தொடர்ந்து சென்று, அவரை காதலிப்பதாக கூறி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
திராவகம் வீசி விடுவதாக மிரட்டல்
சம்பவத்தன்று அந்த மாணவியின் வீட்டின் அருகில் சென்ற அஜய் பிரசாத், மாணவியிடம் தன்னை காதலிக்கவில்லையெனில் முகத்தில் திராவகம் வீசி விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீசார் அஜய் பிரசாத் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்
இதற்கிடையே, மாணவியின் உறவினர்கள், கீழநீலிதநல்லூர் பிள்ளையார் கோவில் அருகில் சென்ற அஜய் பிரசாத்தை பிடித்து, அவரை அங்குள்ள அரச மரத்தில் கட்டி வைத்து தாக்கினர். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், 8 பேர் மீது பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.