கருப்பு பேட்ஜ் அணிந்து மனு கொடுத்த ஆஷா சுகாதார திட்ட ஊழியர்கள்


கருப்பு பேட்ஜ் அணிந்து மனு கொடுத்த ஆஷா சுகாதார திட்ட ஊழியர்கள்
x

ஆஷா சுகாதார திட்ட ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது உதவித்தொகை, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைள் தொடர்பாக 176 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். அப்போது ஆஷா சுகாதார திட்டத்தின் ஊழியர்கள் பலர் கருப்பு பேட்ஜ் அணிந்து கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆஷா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரமும், பிற மாநிலங்களை போன்று ஊக்கத்தொகையும் வழங்க வேண்டும். அதேபோல் கொரோனா தடுப்பூசி முகாம்களுக்கு ரூ.500 ஊதியமாக வழங்க வேண்டும். மேலும் பணிக்கொடை மற்றும் இறப்புநிவாரணமாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல் குஜிலியம்பாறை அருகே உள்ள தோளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள், கறவை மாடுகள் வழங்க லஞ்சம் பெறப்பட்டதாக கூறி மனு கொடுத்தனர். அதுபற்றி அவர்கள் கூறுகையில், தோளிபட்டியில் அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கியதற்கு அதிகாரிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்டு இருக்கிறது. அதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். மேலும் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியை சேர்ந்தவர் அழகுராஜ் (47). இவர், அம்மையநாயக்கனூர் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட முயன்றார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவரை சமரசம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story