வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெள்ளத்தடுப்பு பணிகள் குறித்து சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், திட்ட அலுவலர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள், திருவான்மியூர் அக்கரை 6 வழி சாலையாக அகலப்படுத்தும் பணி, சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டுமான பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி போன்றவற்றை கண்காணித்து விரைந்து மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களை அறிவுறுத்த அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் வடிகால்களில் அடைப்புகளை நீக்கி மழைநீர் எளிதாக செல்ல வழிவகை செல்ல உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்றும், இதுதொடர்பான ஒப்பந்த பணிகளை 30-ந் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தினார்.

கிழக்கு கடற்கரை சாலையில் நிலுவையில் உள்ள நில எடுப்பு பணிகளை விரைந்து முடிக்கவும், மின் தளவாடங்களை அகற்றும் பணி, குடிநீர்குழாய்களை அகற்றும் பணி போன்றவற்றை தனி கவனம் செலுத்தி விரைந்து முடிக்கவும், நிலஎடுப்பு பணிகளில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து குறிப்பிட்ட காலத்திற்குள் நில எடுப்பு பணிகளை முடிக்க, சிறப்பு கவனம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் பாலப்பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொண்டார்.


Next Story