கேரளாவில் பரவும் அவதூறுகளின் நீட்சியாக முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய பாடல் வெளியீடு
கேரளாவில் பரவும் அவதூறுகளின் நீட்சியாக முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக சர்ச்சைக்குரிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சித்தரிக்கப்பட்ட அனிமேஷன் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
முல்லைப்பெரியாறு
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக திகழும் முல்லைப்பெரியாறு அணை தமிழக-கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆங்கிலேய பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் முயற்சியால் இந்த அணை கட்டப்பட்டது.
இந்த அணையில் தமிழகத்துக்கு 999 ஆண்டுகளுக்கான குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டு நடைமுறையில் உள்ளது. அணையின் பராமரிப்பு பணிக்காக கடந்த 1979-ம் ஆண்டு நீர்மட்டம் 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. அணை பலப்படுத்தப்பட்ட பின்பு, அணையில் பல்வேறு வல்லுனர் குழுவினர் நடத்திய பல கட்ட ஆய்வுகளில் அணை பலமாக இருப்பதை உறுதி செய்தனர். அதன்படி அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளவும், அணை பகுதியில் உள்ள பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
சமூக வலைத்தளங்களில் அவதூறு
அதன்படி 2014-ம் ஆண்டில் இருந்து அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவினரும் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து அணை பலமாக இருப்பதை உறுதி செய்து வருகின்றனர். ஆனால் முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது.
அதேநேரத்தில் இந்த அணைக்கு எதிராக கேரளாவை சேர்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர். அணையை உடைக்க வேண்டும் என்றும், அணை உடைந்து விடும் என்றும் அவதூறான கருத்துகளை பரப்பி மக்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய பாடல்
இதுபோன்ற அவதூறுகளின் நீட்சியாக அணைக்கு எதிராக அனிமேஷன் வீடியோவுடன் கூடிய ஒரு பாடலை கேரளாவை சேர்ந்த சிலர் வெளியிட்டுள்ளனர். ராகவன் சோமசுந்தரம் என்பவர் எழுதி, பாடியதாகவும், அஷ்லின் என்பவர் இயக்கி, இசை அமைத்து, அனிமேஷன் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடலில் அணைக்கு எதிரான அவதூறான கருத்துகள் இடம் பெற்றுள்ளதோடு, அணையின் நீரால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பச்சிளம் குழந்தை தத்தளிப்பது போன்றும், மனிதர்கள், காட்டு விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் கற்பனையாக சித்தரிக்கப்பட்ட ஏராளமான அவதூறுகள் காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. இது தமிழக விவசாயிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. இதுபோன்ற அவதூறுகள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கேரள அரசு மவுனம் சாதித்து வருவதாக தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.