அருந்ததியர் உள் ஒதுக்கீடு- திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு பரிசு: முதல்-அமைச்சர்
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பு அமைந்திருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அருந்ததியர் உள் ஒதுக்கீடு- திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு பரிசு என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
"சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் வாழும் அருந்ததிய மக்களின் அவல வாழ்வை அகற்றிட முத்தமிழறிஞர் கலைஞர் 2008-ஆம் ஆண்டில் திட்டமிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் தலைமையில் 25.3.2008 அன்று குழு அமைத்தார். அக்குழு வழங்கிய பரிந்துரையின்படி ஆதிதிராவிட மக்களுக்குள், அருந்ததியின மக்கள் பொருளாதார நிலையில் அடித்தளத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதால் அவர்தம் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியமெனக் கருதி; ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் இருந்து 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 27.11.2008 அன்று கூடிய தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. 29.4.2009 இல் இது தொடர்பான விதிகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
2009-2010-இல் அருந்ததிய சமுதாயத்தைச் சேர்ந்த 56 மாணவ மாணவியர் மருத்துவக் கல்லூரிகளிலும் 1,165 மாணவ மாணவியர் பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து, மொத்தம் 1,221 பேர் பயன் பெற்றனர்.
சட்டப் பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றிய அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த வேளையில் 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் அருந்ததியினர் உள் ஒதுக்கீடு சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், ஏற்கனவே, அதாவது 2004-ஆம் ஆண்டிலேயே உள் இட ஒதுக்கீட்டை அனுமதிக்கக் கூடாது என்று ஆந்திர மாநில வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள்அமர்வு ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தது. அதன் காரணமாக, அருந்தியினருக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை 7 நீதிபதிகள் அமர்வுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது.
இந்த வழக்கில், மாண்புமிகு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு, பட்டியலின பழங்குடியினருக்கான உள் இட ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும்; அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என்று 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பினை 1.8.2024 அன்று வழங்கினர். உச்சநீதிமன்றத்தின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வரவேற்றுப் பாராட்டி வருகின்றனர்.
இதற்கு, திராவிட முன்னேற்றக் கழக அரசின் சார்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிமுகம் செய்து நிறைவேற்றிய அருந்ததியினர் உள் இட ஒதுக்கீடு சட்டம் மீதான உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு தற்போது அளித்துள்ள தீர்ப்பு இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய திராவிட மாடல் அரசின் ஓர் உன்னதமான திட்டத்திற்குக் கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்பது நினைவுகூரத்தக்கது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.