கிரிவலப் பாதையில் கட்டிய அருணகிரிநாதர் மணிமண்டபம்-அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
அமைச்சர் திறந்து வைத்திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ.1.33 கோடியில் கட்டப்பட்டுள்ள அருணகிரிநாதர் மணிமண்டபத்தை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ரூ.1.33 கோடியில் கட்டப்பட்டுள்ள அருணகிரிநாதர் மணிமண்டபத்தை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திறந்து வைத்தார்.
அருணகிரிநாதர் மணி மண்டபம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அத்தியந்தல் ஊராட்சி பகுதியில் பொதுமக்கள் நன்கொடை மற்றும் அரசு நிதியின் மூலம் ரூ.1.33 கோடி மதிப்பில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மணிமண்டபத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு மணி மண்டபத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
ஆன்மிகத்துக்கு வேண்டாத இயக்கம் போல ஒரு காலத்தில் தி.மு.க. சித்தரிக்கப்பட்டது.
ஆனால் உண்மையிலேயே ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் பிரிக்க முடியாது. அதற்கு சான்றாகத்தான் அருணகிரிநாதர் மணி மண்டபம் இன்று திறக்கப்பட்டுள்ளது. ஆன்மிகத்திற்கு தொண்டு செய்கின்ற பணியை தமிழக அரசு செய்து வருகிறது.
'மாஸ்டர் பிளான்'
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பல்வேறு ஆன்மிகப் பணிகள் நடைபெற உள்ளது.
அதற்கான 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் அருணகிரிநாதர் மணிமண்டபத்தில் இன்னும் பல பணிகள் அமைய உள்ளது. அரசு சார்பில் இந்த பணிகளை நாங்கள் செய்தாலும்ஆன்மிக சிந்தனை உள்ள கொடை மனம் உள்ளவர்கள் நன்கொடை கொடுக்க முன்வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
7 இசைக்கு சந்தம் அமைத்தவர்
இரண்டாம் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டு வரை சமணம் தான் மேலோங்கி இருந்தது. அதன்பின்பு சமயகுறவர்கள் நால்வரால் சைவம் பரப்பப்பட்டது. இந்த மண்ணில் பிறந்த அருணகிரிநாதர் 16 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். நமக்கு 1,307 மட்டுமே.
அதைத்தான் 'திருப்புகழ்' என்கிறோம். ஏழு இசைக்கு சந்தம் அமைத்து தந்தவர் தான் அருணகிரிநாதர்.
அவர் அமைத்த சந்தத்தை வைத்துதான் கே.பி.சுந்தராம்பாள் முதல் இன்றுள்ள இளையராஜா வரை பாடல்கள் அமைத்து பாடியுள்ளனர்.
சைவத்தை பரப்பியவர்கள் சிவனை முன் நிறுத்தி பாடினார்கள். ஆனால் அருணகிரிநாதர் தான் தமிழ் கடவுள் முருகன் புகழை பாடினார். சந்தக் கவி மூலம் ராஜாவுக்கே கடவுளை காட்டிய அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டி விழா எடுத்தமைக்கு தமிழக அரசின் சார்பிலும் தமிழ் பற்றாளர்கள் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்கண்டவாறு பேசினார்.
விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., தி.மு.க.மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், அருணகிரிநாதர் விழா குழுவினர் பி.அமரேசன் தனுசு, சின்ராஜ், முன்னாள் எம்.பி. வேணுகோபால், பிரியா விஜயரங்கன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோமதி குணசேகரன், டிவிஎஸ் ராஜாராம், தி.மு.க. விவசாய அணி அமைப்பாளர்கள் மெய்கண்டன், எதிரொலி மணியன், மாவட்ட அரசு வழக்கறிஞர் கே.வி.மனோகரன், ஜி.புகழேந்தி, திருவண்ணாமலை ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.