அரும்பாவூர் பெரிய ஏரியில் மீன் பிடி திருவிழா


அரும்பாவூர் பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவே பொதுமக்கள் மீன்பிடித்ததால் குறைந்தளவே மீன் கிடைத்தது.

பெரம்பலூர்

மீன்பிடி திருவிழா

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பெரிய ஏரியை ஒவ்வொரு ஆண்டும் மீனவர்கள் குத்தகைக்கு ஏலம் எடுத்து மீன்களை வளர்த்து வருவார்கள். இவ்வாறு மீன்களை வளர்த்து குறிப்பிட்ட காலம் வரை பிடித்து விற்பனை செய்வார்கள். பின்னர் ஏரியில் குறிப்பிட்ட அளவிற்கு நீர் அளவு குறைந்தால் பொதுமக்கள் சார்பில் அங்கு மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கம்.

தற்போது ஏரியில் நீர் அளவு குறைந்ததால் பொதுமக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்துவது என முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை பொதுமக்கள் மீன்பிடித்து கொள்ளலாம் என மீனவர்கள் அறிவித்தனர்.

மீன் குழம்பு வாசனை...

ஆனால் நேற்று முன்தினம் இரவே ஏரியில் புகுந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். அதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏரியில் மீன்பிடித்த பொதுமக்களிடம் பேசி நாளை காலை (நேற்று) முதல் மீன் பிடித்துக்கொள்ளலாம் என அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அதனைத்தொடர்ந்து நேற்று காலை பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஏரியில் இறங்கி ஊத்தா கூடை, வலை மூலம் கெண்டை, ஜிலேபி, தேங்காய்பாறை உள்ளிட்ட மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

இதில் அரும்பாவூர்,அன்னமங்கலம், பூலாம்பாடி, வெண்பாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். நேற்று முன்தினம் இரவே மீன்களை சிலர் பிடித்ததால் பொது மக்களுக்கு குறைந்தளவு மீன்களே கிடைத்தன. இருப்பினும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி சென்றனர். பின்னர் அவர்கள் குழம்பு வைத்து சாப்பிட்டனர். இதனால் அரும்பாவூர், அன்னமங்கலம் உள்ளிட்ட ஊர்களில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.


Next Story