கோவில்களில் ஆருத்ரா தரிசனம்


கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
x

நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாபநாசம்

நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் மார்கழி மாத திருவாதிரை திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நடராஜருக்கு சிவப்பு சாத்தி அலங்காரம், வெள்ளை சாத்தி அலங்காரம், பச்சை சாத்தி அலங்காரம் நடைபெற்றது.

நேற்று காலை ஆருத்ரா தரிசனம் நடந்தது. அதிகாலை 3 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஹோமம், கும்ப பூஜை, கந்த தைலம், மாபொடி, மஞ்சள், திரவியம், நெல்லிப்பொடி, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், திரவியம், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 36 வகையான சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசனம், கோபூஜையைத் தொடர்ந்து தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

களக்காடு

களக்காடு சத்தியவாகீஸ்வரர்-கோமதி அம்பாள் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா நடந்தது. இதையொட்டி சத்தியவாகீஸ்வரர், கோமதி அம்பாள், நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து விஷேச அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டு, பின்னர் நடராஜர், சிவகாமி அம்பாள் கோவில் பிரகாரங்களில் திருநடனமாடி திருக்காட்சி அளித்தனர். பின்னர் நடராஜர் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதுபோல களக்காடு கீழப்பத்தை குலசேகரநாதர் கோவிலில் நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு ஆருத்ரா தரிசன வழிபாடுகள் நடத்தப்பட்டது. சிறப்பு அபிஷேகங்களுக்கு பின் நடராஜருக்கு தாண்டவ தீபாராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.


Next Story