கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: சிறப்பு முகாமில் ஒரே நாளில் 4,593 பேர் விண்ணப்பம்


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: சிறப்பு முகாமில் ஒரே நாளில் 4,593 பேர் விண்ணப்பம்
x

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட சிறப்பு முகாமில் ஒரே நாளில் 4,593 பேர் விண்ணப்பித்தனர். சிறப்பு முகாம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவுபெறுகிறது.

புதுக்கோட்டை

சிறப்பு முகாம்கள்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1,000 வழங்குவதற்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் மாவட்டத்தில் முதல் கட்டமாக புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய தாலுகாக்களில் கடந்த ஜூலை மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 4-ந் தேதி வரை நடைபெற்றன.

இதையடுத்து, 2-வது கட்டமாக திருமயம், கறம்பக்குடி, குளத்தூர், விராலிமலை, ஆவுடையார்கோவில் ஆகிய தாலுகாக்களில் கடந்த 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றன. இந்த முகாம்களில் விடுபட்டவர்களுக்காகவும், மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன.

ஒரே நாளில் 4,593 விண்ணப்பங்கள்

இதையடுத்து சிறப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 4,593 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு படிவம் பதிவு செய்யப்பட்டது தொடர்பாக பயனாளிகளின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் வந்தது. இந்த குறுந்தகவல் வராதவர்களுக்கும் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து சிறப்பு முகாம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது.


Next Story