கலைஞர் மகளிர் உரிமை திட்டம்; அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
2 ஆயிரம் குடும்ப தலைவிகள்
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் நேற்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் அந்த திட்டத்தின் தொடக்க விழா வாலாஜாநகரத்தில் நேற்று நடந்தது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்து, அத்திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதற்கு அரியலூர், செந்துறை வட்டாரங்களை சேர்ந்த 2 ஆயிரம் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு அந்த பணத்தை எடுப்பதற்கான வங்கி பற்று அட்டைகளை (ஏ.டி.எம்.) வழங்கினார். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், படிப்படியாக மற்ற வட்டங்களிலும் குடும்ப தலைவிகளுக்கு ஏ.டி.எம். அட்டைகள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்படும். விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி வரப்பெற்றால் இ-சேவை மையம் மூலமாக சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம். குறுஞ்செய்தி வரவில்லை என்றால் அவர்களது விண்ணப்பங்கள் இந்த மாதம் இறுதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் ரூ.1,000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
உதவி மையங்கள்
இது தொடர்பான சந்தேங்கள் மற்றும் விவரங்கள் தெரிவிப்பதற்காக, மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது, என்றார். இதில் வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), வாலாஜாநகரம் ஊராட்சி மன்ற தலைவர் அபிநயா இளையராஜன், முன்னோடி வங்கி முதன்மை மேலாளர் லாயனல் பேனிடிக்ட், மாவட்ட நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.