கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: புதிய பயனாளிகளுக்கு இன்று ரூ.1,000 வழங்குகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: புதிய பயனாளிகளுக்கு இன்று ரூ.1,000 வழங்குகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 10 Nov 2023 1:15 AM GMT (Updated: 10 Nov 2023 5:45 AM GMT)

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைந்துள்ள புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது.

சென்னை,

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

மேலும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ம் தேதி வருவதால் முன்கூட்டியே உரிமைத் தொகையை விடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தற்போது புதிதாக 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகள் இணைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தற்போது இணைந்துள்ள புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா இன்று நடைபெறுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகையை வழங்குகிறார்.


Next Story