கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம் தொடங்கியது


கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் பதிவு முகாம் தொடங்கியது
x

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் நேற்று தொடங்கியது. கலெக்டர் கார்த்திகேயன் அந்த பணியை ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் நேற்று தொடங்கியது. கலெக்டர் கார்த்திகேயன் அந்த பணியை ஆய்வு செய்தார்.

பதிவு முகாம்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.1,000 மாதந்தோறும் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஏதுவாக ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்களும், அவர்கள் எந்த தேதியில் வந்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதற்கான டோக்கன்களும் வீடு, வீடாக சென்று வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் புறநகர் பகுதி மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, பதிவு முகாம் நேற்று தொடங்கியது.

கலெக்டர் ஆய்வு

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி நெல்லை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் தொடங்கி உள்ளது.

528 முகாம்

மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் 528 முகாம்களில் இந்த பதிவு முகாம் நடைபெறுகிறது. இதற்காக 4 நாட்களாக 2 லட்சத்து 119 விண்ணப்பங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டு உள்ளது. இவர்களிடம் இருந்து வருகிற 4-ந் தேதி வரை விண்ணப்பங்களை டோக்கன் வரிசைப்படி பெறப்பட்டு வருகிறது.

இணையவசதி நன்றாக செயல்படும் பகுதியில் விண்ணப்பத்தை பெற்று உடனுக்குடன் இணைய பதிவு மேற்கொள்ளப்பட்டு, கைரேகை பதிவு செய்து செல்போன் குறுந்தகவல் மூலம் ஒப்புகை வழங்கப்படுகிது. இணையவசதி முழுமையாக செயல்படாத பகுதிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு பொது மக்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். பின்னர் அவை ஓரிரு நாட்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கான செல்போன் குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். பதிவு செய்ய தவறவிட்டவர்கள் கடைசி 2 நாட்களில் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டு உள்ளது. நகரப் பகுதிகளில் 2-வது கட்டமாக முகாம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது பாளையங்கோட்டை தாசில்தார் சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story