கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பெறுவதற்கு 1,434 மையங்கள் அமைப்பு


கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்: பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பெறுவதற்கு 1,434 மையங்கள் அமைப்பு
x

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பெறுவதற்கு 1,434 மையங்கள் அமைக்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

திருநெல்வேலி

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பெறுவதற்கு 1,434 மையங்கள் அமைக்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்தார்.

பயிற்சி முகாம்

நெல்லை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் நெல்லை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 840 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு உரிய விண்ணப்ப படிவங்களை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று நேரில் வழங்குவார்கள். விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்துடன் வழங்கப்படும் டோக்கனில் தெரிவிக்கப்படும் தேதி மற்றும் நேரத்தில் பயனாளிகள், இதற்காக அந்த பகுதியில் அமைக்கப்பட உள்ள விண்ணப்ப பதிவு மையங்களுக்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். ரேஷன் கடை பணியாளர்களால் வழங்கப்படும் அரசால் அச்சிடப்பட்டு வழங்கப்படும் விண்ணப்பத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

1,434 பதிவு மையங்கள்

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 1,434 விண்ணப்ப பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. குடும்ப தலைவிகள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மின்சார கட்டண ரசீது ஆகியவற்றை அசலாக எடுத்து செல்ல வேண்டும். விண்ணப்பத்தோடு எந்த நகலும் இணைக்க தேவையில்லை. மேலும் விண்ணப்ப பதிவு மையத்தில் விண்ணப்பத்துக்கு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சரிபார்க்க பதிவு மையங்களுக்கு அருகில் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், பதிவு மையங்களுக்கு சென்ற உடன், உதவி மையத்தில் அந்த விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு விண்ணப்பபதிவு பணியாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

செல்போனை கொண்டு செல்ல வேண்டும்

ஒரு குடும்ப அட்டையில் உள்ள பெண்களில் ஒருவர் மட்டுமே விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவு மையத்துக்கு செல்ல வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் தனது ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டு உள்ள எண் கொண்ட செல்போனையும் கையில் எடுத்து செல்ல வேண்டும்.

மேலும் இந்த திட்டம் குறித்த விவரத்தை பொதுமக்கள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9786566111 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இந்த விண்ணப்ப பதிவு செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார் கலந்து கொண்டார்.


Next Story