கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: கிராமப்புறங்களில் வீடு வீடாக விண்ணப்பம் வினியோகம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் கிராமப்புறங்களில் வீடு வீடாக விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்தார்.
அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக ஏற்கனவே 2023-2024 பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறும் பணி வருகிற 24-ந்தேதி முதல் மற்றும் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கு முன் விண்ணப்பங்களை வீடு வீடாக சென்று வினியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் முதல்கட்டமாக அனைத்து கிராம ஊராட்சிகளில் உள்ள 528 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக விண்ணப்ப படிவங்கள் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கினர்.
இந்த விண்ணப்பங்களை பொதுமக்கள் பூர்த்தி செய்து, வருகிற 24-ந்தேதி முதல் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் கொண்டு சென்று வழங்க வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விவரங்களின்படி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான பயனாளிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவு செய்ய உள்ளனர்.
தொடர்ந்து 2-வது கட்டமாக நெல்லை மாநகராட்சி, களக்காடு, அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சி, அனைத்து பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 312 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி முதல் வீடுவீடாக விண்ணப்ப படிவங்கள் வினியோகம் செய்யப்படுகிறது. அதற்கான 2-ம் கட்ட சிறப்பு முகாம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்கி, 16-ந்தேதி வரை நடக்கிறது.
முகாம்களில் பொதுமக்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை காண்பித்து பதிவு செய்ய வேண்டும். சிறப்பு முகாம்கள் நடக்கும் இடம் உள்ளிட்ட விவரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் டோக்கனில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.