கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப பதிவு முகாம் தொடங்கியது
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வதற்கான விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்வதற்கான விண்ணப்ப பதிவு முகாம் நேற்று தொடங்கியது. இதனை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்யன் ஆய்வு செய்தார்.
உரிமைத் தொகை
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து பயனாளிகளை தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாம் அனைத்து ரேஷன் கடை பகுதிகளிலும் 2 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட முகாம் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடக்கிறது. இதற்கு முன்பாக விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன், ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் ரேஷன்கார்டுதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
முகாம்
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு வீடாக சென்று வினியோகம் செய்யும் பணி நடந்தது. இதில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பம் பெறும் முகாமில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 980 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் 600 ரேஷன் கடை பகுதிகளில் நடக்கிறது. இதற்காக அந்தந்த ரேஷன் கடை பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்களில் முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் குடும்பத் தலைவிகள் ஆர்வமுடன் வந்து பூர்த்தி செய்த விண்ணப்ப மனுக்களை வழங்கினர்.
கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனருமான சிஜி தாமஸ் வைத்யன் நேற்று தூத்துக்குடிக்கு வந்தார். அவர் தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள ஆகாயதாமரை குறுங்குழுமம் உற்பத்தி ஆலையை புனரமைக்கும் பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோன்று மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் மற்றும் அலவலர்கள் உடன் இருந்தனர்.
முன்னதாக தூத்துக்குடி மாநகராட்சி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடந்த கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் பெறும் முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சிஜி தாமஸ் வைத்யன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.