கலைஞர் நூற்றாண்டு விழா: பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற 43 மாணவர்களுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரிசு வழங்கினார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற 43 மாணவர்களுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரிசு வழங்கினார்.
பேச்சு போட்டி
கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மேயர் இந்திராணி ஏற்பாட்டின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் 2752 பேர் கலந்து கொண்டு கருணாநிதி உருவத்தை உருவாக்கினர். இந்த நிகழ்வு, உலக சாதனை டிரம்ப் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது. அதன் தொடர்ச்சியாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு இடையே கருணாநிதி குறித்த பேச்சு போட்டி பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்டது. இந்த போட்டிகள், முதலில் அந்தந்த பள்ளிகள் அளவில் நடத்தப்பட்டது.
முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்களை கொண்டு மண்டல அளவிலான பேச்சு போட்டிகள் நடந்தது. இறுதி போட்டியில் 43 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி தலைமை தாங்கினார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.
பேச்சாற்றல்
அப்போது அவர் கூறியதாவது:- கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மதுரை மாநகராட்சி சார்பாக நடத்தப்பட்ட பேச்சு போட்டியில் முதல் மற்றும் 2-ம் பரிசு பெற்ற மாணவர்களின் பேச்சினை இங்கு கேட்டோம். அவர்களது உரைகளில், கருணாநிதியின் பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் எந்த அளவிற்கு சிறப்பாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டியது. கல்லூரி கல்வியை காணாத அவரிடம் சுயமாக இருந்த திறமைக்கு காரணம் அவரது மொழிப்பற்று தான்.
பொது கூட்டங்களில் பலர் முன்னிலையில் பேசுவது என்பது பலருக்கு கடினமான ஒன்றாக இருக்கும். சிலருக்கு அது சிறப்பான ஒன்றாக இருக்கும். அதில் முதன்மையானவர் கருணாநிதி. அதனால் தான் இன்றைக்கு வரை எல்லோரும் கூறுவது போல தமிழையும், கருணாநிதியையும், தமிழர்களையும் கருணாநிதியையும், தமிழ்நாட்டையும், கருணாநிதியையும் பிரித்து பார்க்கவே முடியாது.
நான் முதல்வன் திட்டம்
அதே போல் கருணாநிதி, தகவல்களை உள்வாங்கி கொள்வதிலும், அடுத்தவர்களிடம் தகவல் கண்டறிவதும் அவருடைய மிகப்பெரிய திறமை. கூட்டம் நடத்தும் போது கூட கூட்டத்தில் உள்ள அனைத்து நபர்களின் கருத்தை எந்த ஒரு குறுக்கீடும் இல்லாமல் உள்வாங்கி கொண்டு அதன் பிறகு தெளிவான முடிவை எடுப்பார். கல்வியின் முக்கியத்துவம் நம்முடைய இனத்திற்கு, கலாசாரத்திற்கு முக்கியம். மன்னர்களுக்கு கூட அவர் ஆளுகின்ற நாட்டில் மட்டும் தான் மரியாதை. ஆனால் கற்றோருக்கு செல்லுகிற இடமெல்லாம் சிறப்பு என்ற அடிப்படையில் மாணவ, மாணவிகள் செயலாற்ற வேண்டும். அதற்கு தமிழக அரசின் நான் முதல்வன் திட்டம் உறுதுணையாக நிற்கும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார். அதில் பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.