கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம்; கலெக்டர் தகவல்
கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்கள் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
மேல் முறையீடு
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம். அட்டைகள் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தும் பயனாளியாக தேர்வு செய்யப்படாதவர்களுக்கு, அதற்கான காரணம் குறித்து இன்று 18-ந்தேதி முதல் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ.சேவை மையம் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு இணையவழியில் மட்டும் மேல்முறையீடு செய்யலாம். அந்த மேல் முறையீட்டுக்கு 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.
தொலைபேசி எண்கள்
மேலும் இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலக உதவி மைய எண்களில் தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
கலெக்டர் அலுவலகம் 9786566111, நெல்லை கோட்டாட்சியர் அலுவலகம் 0462-2501333, சேரன்மாதேவி கோட்டாட்சியர் அலுவலகம் 04634-260124, நெல்லை தாலுகா அலுவலகம் 0462-23333169, பாளையங்கோட்டை தாலுகா அலுவலகம் 0462-2500086, மானூர் 0462 -2914060, சேரன்மாதேவி 04634 -260007, அம்பை -0634-250348, நாங்குநேரி 04635-250123, ராதாபுரம் 04637 -254122, திசையன்விளை தாலுகா அலுவலகம் 04637-271001 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
ஓ.டி.பி. எண் கேட்கப்படாது
மேலும் இந்த திட்டத்துக்காக பயனாளிகளிடம் இருந்து எந்தவித 'ஓ.டி.பி. எண்' கேட்கப்படுவதில்லை. எனவே போலி தொலைபேசி அழைப்புகள், குறுந்தகவல், தவறான வாட்ஸ்-அப் தகவல்களை நம்பி பொது மக்கள் ஏமாற வேண்டாம். சந்தேகம் இருந்தால் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.