வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள்


வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள்
x

அரசு பள்ளி மாணவா்களுக்கு வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை

கலைத்திருவிழா

கறம்பக்குடி வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் கறம்பக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் ஓவியம், வரைந்து வண்ணம் தீட்டுதல், கதை எழுதுதல், களிமண் சுதை வேலைப்பாடு, கட்டுரை, பேச்சு, கதை சொல்லுதல், தனி நபர் நடிப்பு, செவ்வியல் நடனம், கிராமிய குழு நடனம், திருக்குறள் ஒப்புவித்தல், வாத்திய கருவிகள் இசைத்தல் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் கறம்பக்குடி வட்டார அளவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கறம்பக்குடி அருகே உள்ள செவ்வாய்ப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 13 போட்டிகளில் முதல் இடமும், 6 போட்டிகளில் இரண்டாம் இடமும் பெற்றனர். ஒரு போட்டியில் 3-ம் இடம் கிடைத்தது. இதன்மூலம் மாவட்ட அளவில் நடைபெறும் 19 போட்டிகளில் பங்கு பெற இப்பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

பரிசுகள்

வட்டார அளவிலான போட்டிகளில் அதிக பரிசுகளை குவித்து பள்ளிக்கு முதல் இடத்தை பெற்று தந்த மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மேலாண்மை குழுவினர், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இதேபோல் தட்டாமனைப்பட்டி அரசு நடு நிலைப்பள்ளி மாணவர்கள் 3 போட்டிகளில் முதல் இடமும், 6 போட்டிகளில் இரண்டாம் இடமும், ஒரு போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று பரிசுகளை குவித்தனர்.

ஆலங்குடி

ஆலங்குடி அருகே திருவரங்குளம் வட்டார வளமையத்தின் சார்பில், வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. திருவரங்குளம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தங்கமணி வரவேற்றார். திருவரங்குளம் ஒன்றிய குழு தலைவர் வள்ளியம்மை தங்கமணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டாரக்கல்வி அலுவலர்கள் கருணாகரன், கவிதா, தணராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பேச்சு, கட்டுரை, கவிதை, திருக்குறள் ஒப்புவித்தல், கையெழுத்துப் போட்டி, கதை சொல்லுதல், களிமண் சுதை வேலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் மேல்நிலை, உயர் நிலை, நடுநிலை ஆகிய பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டு தங்களது திறமைகளையும், கலை ஆர்வத்தினையும் வெளிப்படுத்தினர். இதில் பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வட்டார ஒருங்கிணைப்பு குழுவினர், ஆசிரியர் பயிற்றுனர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் லென்சிரொசாரியோ நன்றி கூறினார்.

பொன்னமராவதிஅரசு பள்ளி மாணவா்களுக்கு வட்டார அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது.

பொன்னமராவதி வட்டார அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் தொடங்கியது. போட்டிக்கு வட்டாரக்கல்வி அலுவலர்கள் ராமதிலகம், இலாஹி ஜான் ஆகியோர் தலைமை தாங்கினர். பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகளுக்கு பாட்டு, நடனம், பேச்சு கட்டுரை, கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். போட்டிகளில் பொன்னமராவதி ஒன்றியத்திற்குட்பட்ட 29 பள்ளிகளை சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை நிர்மலா, கருப்புக்குடிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமையா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


Next Story