கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் - 4-ந்தேதி முதல் நடக்கிறது
கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் 4-ந்தேதி முதல் நடக்கிறது. இதுக்குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளம் கலைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த 17 முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது.
குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் திருவள்ளூர் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் திருவள்ளூரில் உள்ள தர்மமூர்த்தி ராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் தனிநபராக பங்கேற்க வேண்டும். குழுவாக பங்குபெற அனுமதி இல்லை. குரலிசை போட்டியிலும், நாதஸ்வரம், வயலின், வீணை, புல்லாங்குழல், தவில், மிருதங்கம் போன்ற கருவி இசை போட்டிகளிலும், பரதநாட்டிய போட்டியிலும் அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.
கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்காலாட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்கபவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டுவரவேண்டும்.
நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளம் கலைஞர்கள் மாநில அளவில் போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு கலை பண்பாட்டுத் துறையின் காஞ்சீபுரம் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த வாய்ப்பினை கலைத்திறன் மிக்க திருவள்ளூர் மாவட்ட இளம் கலைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.