இளைஞர்களுக்கான கலை போட்டிகள்
வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் இளைஞர்களுக்கான கலை போட்டிகள் நடைபெற்றது.
வேலூர்
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலை போட்டிகள் வேலூர் கோட்டை வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. குரலிசை (பாட்டு), பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம், இசைக்கருவி வாசித்தல் ஆகிய 5 போட்டிகள் நடைபெற்றன. இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 17 முதல் 35 வயது வரையிலான ஆண்கள், பெண்கள் என்று 86 பேர் கலந்து கொண்டனர். ஓவியப்போட்டிக்கு 3 மணி நேரமும், மற்ற போட்டிகளுக்கு 5 நிமிடங்களும் வழங்கப்பட்டன. நடுவர்களாக காஞ்சீபுரத்தை சேர்ந்த சியாமகிருஷ்ணன், உஷா, மதுரை செந்தமிழ்செல்வன், சென்னை ஹரிஹரன், ஷீலா ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்று ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட 3 பேரை தேர்வு செய்தனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 5 போட்டிகளில் முதல் பரிசு பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். போட்டியின் முதல்பரிசாக ரூ.6,000, இரண்டாவது பரிசாக ரூ.4,500, மூன்றாவது பரிசாக ரூ.3,500் வழங்கப்பட உள்ளது.
போட்டிகளை கலை பண்பாட்டுத்துறை காஞ்சீபுரம் மண்டல உதவி இயக்குனர் ஹேமநாதன், வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.