ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதானவர் தப்பி ஓட்டம்
ஊராட்சி மன்ற உறுப்பினர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் கைதானவர் கொரோனா பரிசோதனைக்காக அழைத்து சென்றபோது தப்பி ஓடி தலைமறைவானார்.
பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள நெற்குன்றம் ஊராட்சிக்குட்பட்டது செக்கஞ்சேரி கிராமம். நெற்குன்றம் ஊராட்சி மன்ற உறுப்பினராக பாப்பாத்தி (வயது 55) என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ந்தேதி அன்று பாப்பாத்தி வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரியவந்ததையடுத்து, சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டு வீசிய நபரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (22) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட விக்னேசை போலீசார் கொரோனா பரிசோதனைக்காக பூதூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு போலீசார் ஜீப்பில் அழைத்து வந்தனர். அப்போது திடீரென விக்னேஷ் போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார். போலீசாரிடமிருந்து தப்பி ஓடிய விக்னேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.