ஆந்திராவில் கைதானபிரபல கொள்ளையனை ஈரோடு போலீசார் காவலில் எடுத்து விசாரணை
ஆந்திராவில் கைதான பிரபல கொள்ளையனை ஈரோடு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 பவுன் நகையையும் போலீசார் மீட்டனர்.
ஆந்திராவில் கைதான பிரபல கொள்ளையனை ஈரோடு போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 பவுன் நகையையும் போலீசார் மீட்டனர்.
தலைமறைவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 35). இவர் மீது ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களிலும், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் ஏராளமான கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் எல்லைக்கு உள்பட்ட, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீடு உட்பட 2 வீடுகள், சித்தோட்டில் 2 வீடுகள் என 4 இடங்களில் நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு திருப்பதி தலைமறைவானார். போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியில் கொள்ளை வழக்கு ஒன்றில் திருப்பதியை அந்த மாநில போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காவலில் எடுத்து விசாரணை
இதையறிந்த ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், அந்த மாநிலத்திற்கு சென்று கோர்ட்டு அனுமதியுடன் சிறையில் இருந்த திருப்பதியை ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து வந்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினார். விசாரணையில் திருப்பதி, ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் கொள்ளையடித்த 10 பவுன் நகையை அவரது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதிக்கு சென்று திருப்பதி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 10 பவுன் நகையை மீட்டனர். விசாரணை முடிந்து போலீசார் நேற்று திருப்பதியை ஆந்திர மாநிலம் சித்தூருக்கு அழைத்து சென்றனர்.