ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கைதான பெண் துணை தாசில்தார் சிறையில் அடைப்பு


ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கைதான பெண் துணை தாசில்தார் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:45 PM GMT)

தக்கலையில் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது கைது செய்யப்பட்ட பெண் துணை தாசில்தார் சிறையில் அடைக்கப்பட்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை அருகே உள்ள கண்டன்விளை மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவருடைய அக்காள் மகன் ராகுல் (வயது 27). இவருக்கு கண்டன்விளையில் 7 சென்ட் நிலம் உள்ளது. இதில் அவர் வீடு கட்டி வருகிறார். அந்த இடம் விவசாய நிலமாக இருப்பதால் வரைபட அனுமதி பெற முடியவில்லை. இதனையடுத்து விவசாய நிலத்தை தரிசு நிலமாக மாற்றித்தர வருவாய்த்துறையிடம் ராகுல் விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்ப மனு தொடர்பான விவரத்தை தக்கலையில் உள்ள கல்குளம் துணை தாசில்தார் ருக்மணி (45) விசாரணை நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளார். இதுதொடர்பாக ஜெகதீஸ்வரி துணை தாசில்தாரிடம் வேண்டுகோள் வைத்த போது அவர் ரூ.25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஜெகதீஸ்வரி இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்தார். தொடர்ந்து ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நோட்டுகளை ஜெகதீஸ்வரியிடம் வழங்கிய லஞ்ச ஒழிப்பு போலீசார், இந்த பணத்தை துணை தாசில்தார் ருக்மணியிடம் சென்று கொடுக்கும்படி தெரிவித்தனர்.

அதன்படி நேற்றுமுன்தினம் மதியம் தாலுகா அலுவலகம் சென்ற ஜெகதீஸ்வரி, லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி துணை தாசில்தார் ருக்மணியிடம் ரூ.25 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் துணை தாசில்தார் ருக்மணியை கையும், களவுமாக பிடித்து ைகது செய்தனர். அத்துடன் அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் லஞ்ச பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர். அங்கு எதுவும் சிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்தநிலையில் ைகது செய்யப்பட்ட ருக்மணியை போலீசார் நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நடுவர் மற்றும் தனி நீதிபதி கோகிலகிருஷ்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். இதனை விசாரித்து நீதிபதி அவரை வருகிற 26-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து பெண் துணை தாசில்தார் தக்கலையில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் ரமா விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக விரைவில் கோர்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். இந்தநிலையில் பெண் அதிகாரி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிறைக்கு சென்றதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.


Next Story