சென்னை கே.கே.நகரில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை வழக்கில் நண்பர், மனைவியுடன் கைது
சென்னை கே.கே.நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது நண்பர், மனைவியுடன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சென்னை கே.கே.நகர் பாரதிதாசன் காலனி, அம்பேத்கார் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. ரவுடி லிஸ்டிலும் இவரது பெயர் உள்ளது. மனைவி, 2 குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் பாரதிதாசன் காலனி, பி.எஸ்.என்.எல். நிறுவனம் அருகே உள்ள டீக்கடையில் ரமேஷ் டீ குடித்துக்கொண்டு நின்றார். அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய சிலர் ரமேசை சரமாரியாக வெட்டிக்கொன்றனர். பின்னர் அதே காரில் அவர்கள் தப்பிச்சென்று விட்டனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும், கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவின்பேரில், கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் மேற்பார்வையில், அசோக்நகர் உதவி கமிஷனர் தனசெல்வன் தலைமையில் போலீஸ் படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
ரமேசை தீர்த்துக்கட்டியவர்களில் ஒருவர், அவரது பழைய நண்பர் ராகேஷ் என்று தெரிய வந்தது. அவரும் வி.சி.க. கட்சியைச்சேர்ந்தவர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பகை, மற்றும் தனிப்பட்ட பகை காரணமாக ரமேஷ் கொடூரமாக கொல்லப்பட்டது தெரிய வந்தது. ராகேஷ் (வயது 34) மற்றும் கொலையாளிகள் தனா என்ற தனசேகரன் (42), செந்தில்குமார் (30), உதயகுமார் (40), தினேஷ்ராஜன் (23), மோகன்ராஜ் (35), தீபன் (32) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராகேஷ் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
ரியல் எஸ்டேட் தொழிலில் எனது பிழைப்பை ரமேஷ் கெடுத்தார். அதை கண்டித்தேன். உடனே என்னை தீர்த்துக்கட்ட ரமேஷ் திட்டம் போட்டார். இதனால் ரமேசை போட்டுத்தள்ள நானும் முடிவு செய்தேன். சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தேன். இந்த நிலையில், ரமேசால் பாதிக்கப்பட்டு, அவரை பழிவாங்க துடித்துக்கொண்டிருந்த மோகன் ராஜின் நட்பு எனக்கு கிடைத்தது. இருவரும் சேர்ந்து திட்டம் போட்டு, எங்கள் ஆட்களை திரட்டிக்கொண்டு எனது காரில் வந்து, ரமேசை போட்டு தள்ளினோம். இவ்வாறு ராகேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
ராகேசும் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான். அவர் மீதும் கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் கூறினார்கள்.
இதற்கிடையில் ராகேசின் மனைவி சோபனாவும் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். கொலை சதித்திட்டத்தில் சோபனாவுக்கும் பங்கு இருப்பதாக, விசாரணையில் தெரிய வந்ததாகவும், இதனால் அவரும் வழக்கில் சேர்க்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.