கோயம்பேட்டில் 'ஆருத்ரா' நிறுவன மேலாளர் கடத்தல் 7 பேர் கைது
‘ஆருத்ரா’ மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த நிறுவன மேலாளர் கடத்தப்பட்டார். இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோயம்பேடு,
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட 'ஆருத்ரா கோல்டு நிறுவனம்', தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த மோசடி வழக்கில் அந்த நிறுவனத்தின் மேலாளரான அரியலூர் மாவட்டம் இரவான்குடியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 37) என்பவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். 2 மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். அவர் 15 நாட்களுக்கு ஒரு முறை சென்னையில் உள்ள கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார்.
காரில் கடத்தல்
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கோர்ட்டில் கையெழுத்திட சென்னை வந்த செந்தில்குமாரை மர்மநபர்கள் காரில் கடத்திச்சென்றனர். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த செந்தில்குமாரின் மனைவி அளித்த புகாரின்பேரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையில் தனிப்படைகள் அமைத்து கடத்தப்பட்ட செந்தில்குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையில் போலீசார் தங்களை தேடுவதை அறிந்த கடத்தல் காரர்கள், செந்தில்குமாரை போரூர் சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
7 பேர் கைது
இந்தநிலையில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செந்தில்குமாரை கடத்தியதாக அம்பத்தூரை சேர்ந்த செல்வம் (38), பாலாஜி (27), சரவணன் (27), அஜித்குமார் (27), விக்னேஷ் (25), மணிகண்டன் (27), சிவா (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
செந்தில்குமார், ஆருத்ரா நிதி நிறுவனத்தின் அரும்பாக்கம் கிளையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். கைதான 7 பேரும் செந்தில்குமார் மூலம் அந்த நிதி நிறுவனத்தில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனர். மோசடியில் ஈடுபட்ட செந்தில்குமார், துபாய்க்கு தப்பிச்சென்றார். அதன்பிறகு போலீசார் அவரை சென்னை வரவழைத்து கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், சென்னையில் கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார்.
ஆஸ்பத்திரியில் அனுமதி
அவரால் பாதிக்கப்பட்ட 7 பேரும், இதை தெரிந்து கொண்டு செந்தில்குமாரை பின்தொடர்ந்து வந்து காரில் கடத்திச்சென்றனர். பின்னர் அவருடைய மனைவியிடம் பேசி தங்களுக்கு இழப்பீடு தரவேண்டும் எனவும் மிரட்டினர். ஆனால் அவர் போலீசில் புகார் செய்ததால் செந்தில்குமாரை, போரூர் சுங்கச்சாவடி அருகே இறக்கிவிட்டு தப்பிச்சென்றது தெரிந்தது.
இதையடுத்து செந்தில்குமாரை போலீசார் தொடர்பு கொண்டபோது அவர், சொந்த ஊருக்கு திரும்பி சென்றது தெரிந்தது. அவரை சென்னை வரவழைத்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான 7 பேரிடம் இருந்தும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், ஆட்டோ உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். செந்தில்குமாரை கடத்தி சென்று பணத்தை கேட்டு 7 பேரும் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.