பெரும்பாலை அருகேகிராம நிர்வாக அலுவலரை மிரட்டியவர் கைதுமற்றொருவருக்கு வலைவீச்சு
ஏரியூர்:
ஏரியூர் ஒன்றியம் பெரும்பாலை அருகே உள்ள மஞ்சநாயக்கன அள்ளி ஊராட்சி கிராம நிர்வாக அலுவலராக மலர் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 9-ந் தேதி கொப்பலூர் ஏரியில் மண் கடத்தி புதுப்பட்டி வழியாக டிப்பர் லாரியில் செல்வதாக ஒருவர் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கூறியுள்ளார்.
இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மலர், கிராம உதவியாளர் பழனி மற்றும் பெரும்பாலை வருவாய் ஆய்வாளர் பூமகள் ஆகியோர் கொப்பலூர் சென்றனர். அப்போது புதுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ஏற்கனவே போனில் புகார் தெரிவித்த புதுப்பட்டியை சேர்ந்த கோவிந்தன் மகன் இளங்கோவன், நாச்சிமுத்து மகன் கைலநாதன் என்ற பகவதி ஆகியோர் நின்றனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் கிராம நிர்வாக அலுவலரிடம் தகாத வார்த்தையில் பேசியதோடு, பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது பகவதி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை தாக்க முயன்றதாக தெரிகிறது. இதுதொடர்பாக மலர் பெரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பகவதியை கைது செய்தனர். தலைமறைவான இளங்கோவனை வலைவீசி தேடி வருகின்றனர். இளங்கோவன் கோவை மாவட்டம் மதுகரையில் ஆசிரியர் பயிற்றுநராக வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.