தர்மபுரியில், மத்திய அரசை கண்டித்துரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 210 பேர் கைது


தர்மபுரியில், மத்திய அரசை கண்டித்துரெயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 210 பேர் கைது
x
தினத்தந்தி 16 April 2023 12:30 AM IST (Updated: 16 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரியில் மத்திய அரசை கண்டித்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.

ரெயில் மறியல் போராட்டம்

காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று காங்கிரஸ் கட்சியினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று தர்மபுரி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

தர்மபுரி அரசு மருத்துவமனை அருகில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக வந்து ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர்கள் நரேந்திரன், ஜெயசங்கர், சண்முகம், கிருஷ்ணன், மோகன்குமார், மாவட்ட பொருளாளர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தின்போது ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்தும், அதானி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.

இதில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், ஐ.என்.டி.யு.சி. முன்னாள் மாவட்ட தலைவர் மோகன், வட்டார தலைவர்கள் மணி, ஞானசேகர், பெரியசாமி, ராஜேந்திரன், வேலன், சிலம்பரசன், காமராஜ், சந்திரசேகரன், நகர தலைவர்கள் வேடியப்பன், கணேசன், குமரவேல், முருகன், கணேசன், ராபர்ட், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீபன்குமார், எஸ்.சி., எஸ்.டி.பிரிவு மாவட்ட தலைவர் சம்பத்குமார், சதீஷ், சிறுபான்மை பிரிவு தலைவர் முபாரக். நிர்வாகிகள் தங்கவேல், ராமசுந்தரம், வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

210 பேர் கைது

இதனைத் தொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர் தீர்த்தராமன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் 14 பெண்கள் உள்பட 210 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தர்மபுரி ஆயுதப்படை மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலை விடுவிக்கப்பட்டனர்.


Next Story