பெண் போலீசின் கணவரை வாளால் வெட்டி நகை, பணம் வழிப்பறி செய்த 2 பேர் கைது
பெண் போலீசின் கணவரை வாளால் வெட்டி நகை, பணம் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை,
பெண் போலீசின் கணவரை வாளால் வெட்டி நகை, பணம் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாளால் வெட்டி நகை, பணம் கொள்ளை
சிவகங்கை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மதுரை வரிச்சூரை சேர்ந்த செக்கடியான் (38), சிவகங்கை மாவட்டம் மழவராயனேந்தலை சேர்ந்த பெண் போலீஸ் புவனேஸ்வரியின் கணவர் மோகன சுந்தரேஸ்வரன் (35) ஆகியோரை வாளால் தாக்கி நகை மற்றும் செல்போன், பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அப்போது அதே வழியில் வந்த சட்டக்கல்லூரி மாணவர் அரவிந்த் (23) என்பவரை வழிமறித்தனர். இதனால் அரவிந்த் அவர்களை கண்டதும் வந்த வழியே திரும்பிச் சென்றார். அந்த 3 பேரும் அரவிந்தை விரட்டி சென்றனர் அப்போது அந்த வழியில் இருந்த சாலையோர ஓட்டல் ஒன்றின் முன்பு இருந்த பலகையில் மோதி அரவிந்த் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், நாகராஜன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டுக்கள் ராஜா, காளீஸ்வரன், கண்ணன், நாகபிரபு கார்மேக கண்ணன், பழனி, சிறார் கண்ணன் ஆகியோரை கொண்ட 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
2 பேர் கைது
இவர்கள் நடத்திய விசாரணையில் சிவகங்கை அடுத்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்ற சந்தோஷ் (23) என்பவர் தலைமையிலான கும்பல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ஜெயராமன் என்ற சந்தோஷ் மற்றும் அலுபிள்ளை தாங்கி கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன்(20) ஆகிய 2 பேரை கைது. செய்தனர்.
இவர்களிடமிருந்து வாள், செல்போன்கள், தங்க சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பில்லுரை சேர்ந்த பாலமுருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.