6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது


6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2023 1:00 AM IST (Updated: 25 Oct 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து 6 கிலோ தங்கம், ரூ.60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் ஓசூரில் கைது செய்தனர்.

தர்மபுரி

காரிமங்கலம்:-

காரிமங்கலம் அருகே காரை வழிமறித்து 6 கிலோ தங்கம், ரூ.60 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேரை தனிப்படை போலீசார் ஓசூரில் கைது செய்தனர்.

நகை கொள்ளை

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னா (வயது 40). இவர் கோவையில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி கடை ஊழியர்கள் 4 பேர் பெங்களூருவில் இருந்து நகைகளை வாங்கிக்கொண்டு காரில் கோவைக்கு சென்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே 2 கார்களில் வந்த 4 பேர் திடீரென ஊழியர்கள் வந்த காரை வழிமறித்து மிரட்டி 6 கிலோ தங்க நகை மற்றும் ரூ.60 லட்சத்தை காருடன் கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் 10 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வந்தனர். இதில் கேரளாவை சேர்ந்த 15 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகள், செல்போன் பதிவுகள் விவரங்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து சுஜித் (வயது29), சரத் (36), பிரவீன் தாஸ் (33), சிகாபுதின் என்ற சிபு (36), சைனு (30), அகில் (30), சஜிஷ் (35), அந்தோணி, சிரில் ஆகிய 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

3 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 6 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.16 லட்சத்து 50 ஆயிரம், 4 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தலைமறைவானவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் நகை கொள்ளை சம்பவத்தில் தலைமறைவாக இருந்த கேரளாவை சேர்ந்த ஆசிப் (32), விஷ்னு (27), அக்ஷய் சோனு (22) ஆகிய 3 பேரையும் ஓசூரில் ரிங் ரோடு அருகே போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story