கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 80 பேர் கைது சூதாடிய 21 பேர் பிடிபட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 80 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல சூதாடியதாக 21 பேர் பிடிபட்டனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்ற 80 பேரை போலீசார் கைது செய்தனர். அதே போல சூதாடியதாக 21 பேர் பிடிபட்டனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகளில் குட்கா விற்பனை செய்ததாக 71 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரத்து 500 மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
லாட்டரி சீட்டுக்கள், கஞ்சா
இதேபோன்று மாவட்டத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்ததாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மற்றும் லாட்டரி சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கஞ்சா விற்பனை செய்ததாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,250 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாட்டம்
இதே போல கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து சென்றனர். அப்போது பணம் வைத்து சூதாடியதாக 21 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.