மோகனூர் அருகேஅரசு தொடக்கப்பள்ளி ஆசிரியைகளுக்கு மிரட்டல் அண்ணன்-தம்பி கைது
மோகனூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே வடுகப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 16 பேர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சரஸ்வதி என்பவர் தலைமை ஆசிரியையாகவும், கிருஷ்ணவேணி உதவி ஆசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றனர். அப்போது அங்கு சென்ற 16, 15 வயதுடைய அண்ணன், தம்பி இருவர் மாணவிகளை தகாத வார்த்தையால் திட்டியதுடன், அவர்கள் மீது கற்களை வீசினார்களாம். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அலறியடித்து கொண்டு வகுப்பறைக்குள் சென்றனர். இதனை அறிந்த ஆசிரியைகள் சம்பந்தப்பட்ட சிறுவர்களிடம் கேட்டனர். அப்போது சிறுவர்கள், ஆசிரியைகளையும் தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியை சரஸ்வதி மோகனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அண்ணன், தம்பிகளான 2 சிறுவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசும் விசாரணை நடத்தி வருகிறார்.