மோகனூர் அருகேலாரி டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
மோகனூர்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காடுவெட்டி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது 21). டிரைவர். இவர் லாரியில் சேலத்தில் இருந்து தனது ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் இருந்து வளையப்பட்டி செல்லும் சாலையில் உள்ள என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வந்தபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் நிலைதடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தார்.
இதை தொடர்ந்து நந்தகுமார் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே விழுந்த நபரை தூக்க சென்றார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர், நந்தகுமாரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், செருப்பால் நந்தகுமாரை அடித்ததாக கூறப்படுகிறது. மேலும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.15 ஆயிரம் செலவாகும் என்றும், செலவு தொகையை கொடுக்குமாறு 3 பேர் சேர்ந்து தாக்கினார்களாம்.
வலியால் நந்தகுமார் சத்தம் போடவே அப்பகுதியை சேர்ந்தவர்கள் வருவதற்குள் 3 பேரும் கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து மோகனூர் போலீசில் நந்தகுமார் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையசூரியன் வழக்குப்பதிவு செய்ததுடன் வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்த அரவிந்த் (வயது 30), பூவரசன் (27), தீபன் சக்கரவர்த்தி (27) ஆகிய 3 பேரை கைது செய்தார். தலைமறைவான சுதாகரன் என்பவரை தேடி வருகிறார்.